பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் காவிரி டெல்டா பகுதி முழுவதையும் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் காவிரி டெல்டா பகுதி முழுவதையும் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2020-02-23 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க பொது செயலாளர் துரை.மாணிக்கம், ம.தி.மு.க. மாநில விவசாய பிரிவு அமைப்பாளர் முருகன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக பசுமைவளவன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவனத்தலைவர் தங்கசண்முகசுந்தரம், அகில இந்திய விவசாய போராட்டக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் மாநில செயலாளர் சாமிநடராஜன் மற்றும் ஏராளமானோர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பிற்கு விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளான அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், டி.பளூர், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், கரூர் மாவட்டத்தில் குளித்தலை ஆகிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது,

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கடந்தாண்டு அனுமதியளித்த வேதாந்தா உள்ளிட்ட நிறுவனத்திற்கான அனுமதியை, மத்தியஅரசு ரத்து செய்யவேண்டும், தமிழக அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்