பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2020-02-23 22:15 GMT
தாம்பரம்,

சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தவர் ஆயுஷி ராணா(வயது 19). பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சரிவர படிக்கவில்லை என்று அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சக மாணவிகள் உள்பட யாரிடமும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆயுஷி ராணா அவர் தங்கிருந்த விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆயுஷி ராணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பல்லைக்கழக விடுதி மாணவிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது பெற்றோர் திட்டியதால்தான் ஆயுஷி ராணா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்த அனுப்பிரியா(21), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனிஷ்சவுத்ரி (19) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீராகவ் (21) என 3 பேர் பல்கலைக்கழக மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்