எட்டயபுரம் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி
எட்டயபுரம் அருகே சாலையோரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே சாலையோரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு மேலகரந்தை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அச்சன்குளம் கிராமத்தில் பிரச்சினை நடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் அச்சன்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார்.
லாரி மீது மோதி பலி
அப்போது மதுரை–தூத்துக்குடி சாலையில் எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கிராமத்திற்கு அருகே ஒரு லாரி பழுதாகி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக சிவசுப்பிரமணியன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சிவசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து உடனடியாக மாசார்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பம்
விபத்தில் உயிர் இழந்த சப்–இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 1–ந் தேதி காவல்துறை பணியில் சேர்ந்தார். அவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி (31) என்ற மனைவியும், 2½ வயதில் சக்திஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சப்–இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அங்கிருந்து கடந்த 25.2.2019 அன்று மாசார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றத்தில் வந்தார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள அத்திபட்டி கிராமம் ஆகும்.
பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு மரியாதை
விபத்தில் பலியான சிவசுப்பிரமணியன் உடல் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பீர்முகைதீன், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். அதன்பின்னர் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
–
சிவசுப்பிரமணியன்