மகேஷ் குமட்டள்ளிக்கு அநியாயம் நடந்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி

மகேஷ் குமட்டள்ளிக்கு அநியாயம் நடந்தால் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-23 00:25 GMT
பெங்களூரு,

பெலகாவியில் நேற்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இதன் மூலம் மகதாயி நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது. கர்நாடகம், கோவா எல்லையில் உள்ள கனகும்பி பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் திட்டத்தை பார்வையிட முடிவு செய்துள்ளேன்.

மேலும் மகதாயி நதிநீர் பிரச்சினை உள்பட கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக மத்திய மந்திரியை சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளேன். இதற்காக விரைவில் டெல்லி செல்ல இருக்கிறேன். மகதாயி நதிநீர் பிரச்சினையில் கோவா முதல்-மந்திரி மீண்டும் சுப்ரீம் கோர்்ட்டுக்கு சென்றாலும், அந்த வழக்கை எதிர் கொள்ளவும் கர்நாடகம் தயாராக இருக்கிறது.

மாநிலத்தில் நடைபெற்று வரும் நீர்ப்பாசன திட்டங்களை எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட இலாகா தான் வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்கவில்லை. எனக்கு நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டு இருப்பதற்கு சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். நான் அந்த துறையை சரியாக நிர்வகிக்க மாட்டேன் என்றும் கூறி வருகின்றனர். மந்திரி பதவியில் இதற்கு முன்பு பல முறை இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் நீர்ப்பாசனத்துறையை திறம்பட நிர்வகிப்பேன் என்ற நம்பிக்ைக உள்ளது.

கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்தவர்களில் மகேஷ் குமட்டள்ளியும் ஒருவர் ஆவார். அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. மகேஷ் குமட்டள்ளிக்கு மந்திரி பதவி கிடைக்கும். இந்த விவகாரத்தில் மகேஷ் குமட்டள்ளிக்கு அநியாயம் ஏற்பட்டால், எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன். அதனால் மகேஷ் குமட்டள்ளிக்கு அநியாயம் ஏற்பட விட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்