கடற்கரையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் விருப்பம்

கடற்கரையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் விருப்பம் தெரிவித்தார்.;

Update: 2020-02-23 00:04 GMT
புதுச்சேரி,

புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி சட்ட உதவிகள் மையம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட உரிமைகள் மையம், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் அதீதி ஓட்டலில் நேற்று நடந்தது.

சுற்றுப்புறம், சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடற்கரை தூய்மை

அந்தமான் கடற்கரை பகுதியை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள கடற்கரை குப்பைகள் தேங்கியும், அசுத்தமாகவும் காணப்படுகிறது.

மக்கள் பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். இருந்தபோதிலும் கடற்கரையை தூய்மையாக வைக்கவில்லை. நமது கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். புதுவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் மெட்ரோ நகரங்களுடன் தொடர்பு ஏற்படும். அதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டக்கூடாது. அதனை சேகரித்து திடக் கழிவு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். இதனை நாம் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும்.

இவ்வாறு குர்மீத் சிங் பேசினார்.

விழாவில் புதுவை தலைமை நீதிபதி தனபால், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய இயக்குனர் அறவாழி இரிசப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்