சிவகிரி அருகே பரிதாபம் வைக்கோலுக்கு வைத்த தீயில் தவறி விழுந்து விவசாயி சாவு
சிவகிரி அருகே வைக்கோலுக்கு வைத்த தீயில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
சிவகிரி,
சிவகிரி அருகே வைக்கோலுக்கு வைத்த தீயில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 70) விவசாயி. இவர் தென்மலை அருகே உள்ள பெரிய ஓடை பகுதியில் வயலில் விவசாயம் செய்து வந்தார்.
இந்தாண்டு வயலில் விவசாயம் செய்த நெல் பயிர் வளர்ந்து விட்டதால் நெற்கதிர்கள் அறுவடை பணி நடந்தது. இதனால் வயல் பகுதியில் பரவலாக வைக்கோல் காய்ந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்துவதற்காக காளிமுத்து அந்த வைக்கோலுக்கு தீவைத்தார்.
காளிமுத்துவின் வயலுக்கு அருகே மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்திற்கு தீ பரவி விடக்கூடாது என்பதற்காக தனது வயல் பகுதியில் வைக்கோலில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைப்பதற்காக ஓடிச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக காளிமுத்து கால் தவறி எரியும் நெருப்பில் விழுந்துவிட்டார். இதனால் அவர் தீயில் கருகி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
பரிதாப சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் காளிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகிரி அருகே வைக்கோலுக்கு வைத்த தீயில் தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.