டெல்லியில் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு சோனியா காந்தியுடனும் ஆலோசனை
முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி உறவை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கையில் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது. முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 3 மாதத்துக்கு பிறகு நேற்று முதல் முறையாக டெல்லி சென்றார். அவரது மகனும், மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேயும் உடன் சென்றார். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
பின்னர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
பயப்பட வேண்டாம்
மராட்டியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். இது நல்ல சந்திப்பாக அமைந்தது.
இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை குறித்து பேசினேன். மராட்டிய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்தார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரையும் நாட்டில் இருந்து வெளியேற்றாது.
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். எங்களது கூட்டணியில் எந்த உரசலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சோனியாவை சந்தித்தார்
இந்தநிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று இரவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். 30 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆட்சிக்காக காங்கிரசுடன் கைகோர்த்த பிறகு சோனியாகாந்தியை உத்தவ் தாக்கரே முதல் முறையாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது மந்திரி ஆதித்ய தாக்கரே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. உடன் இருந்தனர்.
பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானியையும் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேயுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.