பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் தேசத்துரோக வழக்கில் கைதான மாணவி சிறையில் அடைப்பு மாநகராட்சி கவுன்சிலரிடமும் போலீஸ் விசாரணை

பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் தேசத்துரோக வழக்கில் கைதான மாணவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரிடம் போலீசார் விசாரித்தனர்.

Update: 2020-02-21 22:59 GMT
பெங்களூரு, 

பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன்தினம் மாலையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த கல்லூரி மாணவியான அமுல்யா லியோனா (வயது 19) என்பவர் மேடையில் ஏறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார்.

இதையடுத்து, உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அமுல்யாவை தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர். அவரிடம் நள்ளிரவு 1 மணிவரை உப்பார்பேட்டை போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதாவது அமுல்யாவுக்கு ஏதாவது அமைப்புடன் தொடர்பு உள்ளதா?, யாருடைய தூண்டுதலின் பேரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார்?, அவருக்கு பின்னால் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டார்

பின்னர் பெங்களூரு 5-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் நீதிபதியான சிரன் ஜே.அன்சாரியின் கோரமங்களாவில் உள்ள வீட்டில் அமுல்யாவை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் அமுல்யாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கவில்லை. மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அமுல்யாவை சிறையில் அடைக்கும்படி நீதிபதி சிரன் ஜே.அன்சாரி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நீதிபதி வீட்டில் இருந்து அமுல்யாவை பலத்த பாதுகாப்புடன் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக கைதான அமுல்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக...

அதாவது கைதான அமுல்யா பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் இதுவரை நடந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் தானாக முன்வந்து கலந்து கொண்டு இருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் அமுல்யா பேசி இருந்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் அவர் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமுல்யா ஏற்கனவே பேசிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால், அதற்கு போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களே முக்கிய பொறுப்பு என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷாவுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி உப்பார்பேட்டை போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர்.

கவுன்சிலரிடம் விசாரணை

அதன்படி, உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா ஆஜராகி போலீசாரிடம் விளக்கம் அளித்தார். அப்போது கைதான அமுல்யாவை போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி தான் அழைக்கவில்லை என்றும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் அனைத்து போராட்டங்களிலும் அமுல்யாவே தானாக முன்வந்து கலந்து கொண்டதாகவும் இம்ரான் பாட்ஷா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த போராட்டத்திற்கு அனுமதி பெற்றவர்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு தேசத்துரோக வழக்கில் கைதான அமுல்யாவுக்கு எதிராக பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடைபெற்றது.

மேலும் செய்திகள்