பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவியின் வீட்டின் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம்-கல்வீச்சு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவியின் வீடு முன்பு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டின் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2020-02-21 22:53 GMT
சிக்கமகளூரு. 

பெங்களூரு சுதந்்திர பூங்காவில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா சிவப்புராவை சேர்ந்த கல்லூரி மாணவி அமுல்யா லியோனா (வயது 19) என்பவரும் கலந்துகொண்டார். இவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சுதந்திர பூங்காவில் நடந்த போராட்டத்தில் மேடை ஏறி அமுல்யா பேசினார். அப்போது திடீரென்று அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்... பாகிஸ்தான் ஜிந்தாபாத்...’ என்று கோஷமிட்டார். இதனை கேட்டு போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அமுல்யாவை தேசத்துரோக வழக்கில் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

போராட்டம்-கல்வீச்சு

இந்த நிைலயில் நேற்று முன்தினம் இரவு சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா சிவப்புராவில் உள்ள அமுல்யாவின் வீட்டின் முன்பு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அமுல்யாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். ேமலும் அமுல்யாவுக்கு எதிராக இந்து அமைப்பினர் கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அமுல்யாவின் தந்தை வாஜியையும் இந்து அமைப்பினர் மிரட்டி உள்ளனர்.

அப்போது அமுல்யாவின் தந்தை வாஜி கூறுகையில், எனது மகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தவறு தான். மன்னிக்க முடியாத தவறை அவள் செய்துவிட்டாள். அவள் இந்தியர் களுக்கு வலியை ஏற்படுத்தி உள்ளாள். நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். அவளை நான் ஜாமீனில் எடுக்க மாட்டேன். அவள் ஏன் அப்படி கூறினாள், அவளுக்கு பின்னால் யார் உள்ளனர் என்பது எங்ளுக்கு தெரியவில்லை என்று கூறினார்.

வீடியோ வைரல்

அப்போது, இந்து அமைப்பினர் வாஜியை, ‘வந்தே மாதரம்’ என்று சொல்லும்படி வற்புறுத்தினர். அவர்கள் கூறியப்படியே வாகித், ‘வந்தே மாதரம்’ என்று கூறினார். இந்த வீடியோவை இந்து அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி சி.டி.ரவி கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்ட கல்லூரி மாணவி எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர், எங்கு பயிற்சி பெற்றார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.

4 பேர் மீது வழக்கு

கல்லூரி மாணவியின் வீட்டின் மீது கல்வீசிய சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ்பாண்டே கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி அமுல்யாவின் வீட்டின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் அவருடைய தந்தையையும் மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம்.

அங்கு எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க அமுல்யாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

போலீஸ் பாதுகாப்பு

அமுல்யாவை கண்டித்து நேற்றும் அவருடைய வீட்டின் முன்பு போராட்டம் நடத்த பல்வேறு அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக கொப்பா போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்