பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி கோஷம்: போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி கோஷமிட்ட விவகாரத்தில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு,
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் நேற்று (நேற்று முன்தினம்) போராட்டம் நடைபெற்றது. இதில் அமுல்யா லியோனா என்ற மாணவி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டுள்ளார். அவரை நாங்கள் அழைக்கவில்லை என்று போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் பேட்ச் அணிவித்தது யார்?. அவருக்கு மைக் யார் கொடுத்தனர்?. இதை பார்க்கும்போது, போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களே, அவருக்கு அழைப்பு விடுத்தது போல் தெரிகிறது.
அதனால் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இது திடீரென நடந்துவிட்டது என்று கூற முடியாது. இது திட்டமிட்டு பேசப்பட்ட கருத்தாகவே தெரிகிறது. இதன் பின்னணியில் யார்-யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி வழியில் போராட்டம் நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை.
தேசத்துரோகிகளே
ஆனால் இங்கே பிறந்து, வளர்ந்து நாட்டுக்கு எதிராக பேசுபவர்கள் தேசத்துரோகிகளே. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்துவார்கள். இனி வரும் நாட்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்று அறிவுறுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
முன்னதாக பசவராஜ் பொம்மையை நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேரில் சந்தித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட விவகாரம் குறித்து விவரங்களை அளித்தார்.