அம்பை அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஆட்டோ டிரைவர் தற்கொலையா? போலீசார் விசாரணை

அம்பை அருகே நேற்று ரெயில் தண்டவாளத்தில் ஆட்டோ டிரைவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

Update: 2020-02-21 21:30 GMT
அம்பை, 

அம்பை அருகே நேற்று ரெயில் தண்டவாளத்தில் ஆட்டோ டிரைவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர் 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராமலிங்கம் (வயது 23) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை மன்னார்கோவில் விலக்கு அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தென்காசி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயிலில் அடிபட்டு சாவு 

இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமலிங்கம் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்