காங்கிரஸ் கட்சிக்கு வர கே.எஸ்.அழகிரி அழைப்பு: “நடிகர் விஜயை தற்கொலைக்கு சமமான வி‌ஷயத்தை செய்ய தூண்டுகிறார்” பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல்

தூத்துக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2020-02-21 22:00 GMT
தூத்துக்குடி, 

காங்கிரஸ் கட்சிக்கு வர நடிகர் விஜய்க்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருப்பது குறித்து கருத்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், தற்கொலைக்கு சமமான வி‌ஷயத்தை செய்ய தூண்டுகிறார் என்று கிண்டலாக கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும் 

தூத்துக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் நடந்த நிகழ்ச்சி ஆகும். அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் பாரதி சில வார்த்தைகளை கூறி இருந்தாலும், அதனை ஏற்க முடியாது. ஆகவே தி.மு.க. தலைவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தூண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாடு விடுதலை பெற்றபோது, இந்த நாட்டில்தான் இருப்பேன் என்று இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மண்ணை விட்டு அகற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு தயாராக இல்லை. வதந்தியை பரப்பி, கலவரத்தை உருவாக்கி, அழிவுகள் ஏற்பட வேண்டும், அது தி.மு.க.வுக்கு லாபம் என்ற வகையில் தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பிரச்சினைக்கு தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்தான் 100 சதவீதம் காரணம்.

தற்கொலைக்கு சமம் 

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று அந்த கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். அவருக்கு நடிகர் விஜய் மீது ஏதோ கோபம் உள்ளது. தற்கொலைக்கு சமமான வி‌ஷயத்தை செய்ய தூண்டுகிறார்.

உலக சந்தையின் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப எரிவாயு விலை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. நம் நாட்டில் உள்ள எரிவாயுவை எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு வி‌ஷயத்தை பூதாகரமாக எடுத்துக்கூறுவது காங்கிரஸ், தி.மு.க.வின் வேலை. வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள திட்டங்களை என்ன செய்வது என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சலி 

முன்னதாக, தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நினைவு நாள் நிகழ்ச்சி ஆனந்த மகாலில் நடந்தது. டாக்டர் ருக்மணி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கோட்ட அமைப்பு செயலாளர் ராஜா, மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜாகண்ணன், ஒருங்கிணைப்பாளர் தேவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்