மோட்டார்சைக்கிள்-லாரி மோதல்: தொழிலாளி சாவு ; மனைவி, மகன் படுகாயம்

பர்கூர் மலைக்கிராமத்தில் மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2020-02-21 21:30 GMT
அந்தியூர், 

தாளவாடி அருகே உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 36). தொழிலாளி. அவருடைய மனைவி பழனியம்மாள் (25). இவர்களுக்கு சந்தோஷ் (8) என்ற மகன் உள்ளான்.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமத்தை சேர்ந்த கார்த்தியின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து கார்த்தி, மனைவி பழனியம்மாள், மகன் சந்தோசுடன் சென்று நேற்று துக்கம் விசாரித்தார்.

பின்னர் அங்கிருந்து 3 பேரும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ள முதலாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது மோட்டார்சைக்கிளும் எதிரே வந்த டிப்பர் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் கார்த்தி சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த பழனியம்மாளும், சந்தோசும் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்