முதல்-மந்திரி அலுவலக ஒருங்கிணைப்பாளராக ரவீந்திர வாய்க்கர் நியமனம்

முதல்-மந்திரி அலுவலக தலைமை ஒருங்கிணைப்பாளராக ரவீந்திர வாய்க்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-02-20 22:41 GMT
மும்பை,

சிவசேனா எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்க்கரை முதல்-மந்திரி அலுவலக தலைமை ஒருங்கிணைப்பாளராக உத்தவ் தாக்கரே நியமித்து உள்ளார். வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முதல்-மந்திரி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடையே இணைப்பு பாலமாக செயல்படும் வகையில் இந்த புதிய பதவியை மாநில அரசு உருவாக்கி உள்ளது.

இதேபோல சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மாநில அளவிலான நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

சலுகைகள் கிடையாது

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு பதவிகளும் கேபினட் அந்தஸ்து கொண்டவை. இதனால் அவர்களுக்கு கேபினட் பதவிகளுக்கான சலுகைகள் மற்றும் படிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் மராட்டிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக கேபினட் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள ரவீந்திர வாய்க்கர் மற்றும் அரவிந்த் சாவந்த் ஆகியோருக்கு அரசு படிகள் மற்றும் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கையை உத்தவ் தாக்கரே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்