மராட்டிய போலீஸ் தலைமையகத்தில் லண்டன் அரண்மனையில் நடப்பதுபோன்ற அணிவகுப்பு நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர ஏற்பாடு
கொலபாவில் உள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் லண்டன் பக்கிங்காம் அரண்மனையில் நடப்பது போன்ற அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மும்பை,
இங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் ‘சேன்ஞ் ஆப் கார்டு' என்ற பெயரில் பாதுகாப்பு துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த அணிவகுப்பை காண சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருப்பார்கள்.
இந்தநிலையில் மும்பை கொலபாவில் உள்ள மாநில போலீஸ் தலைமையகத்திலும் (டி.ஜி.பி. அலுவலகம்) பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறுவது போன்ற ‘சேன்ஞ் ஆப் கார்டு' என்ற அணிவகுப்பை வருகிற மே 1-ந் தேதி முதல் நடத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
ஞாயிறுதோறும் நடக்கும்...
இது குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:-
‘பக்கிங்காம் அரண்மனையில் பாதுகாவலர்கள் ஷிப்ட் மாறும் போது ‘சேன்ஞ் ஆப் கார்டு' அணிவகுப்பு நடக்கிறது. அதே போன்ற அணிவகுப்பு போலீசாரின் பேண்டு வாத்தியங்கள் முழங்க வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநில போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இதுதொடர்பாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரேவுடன் போலீஸ் தலைமையகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர்.