கர்நாடகத்தில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்காவிட்டால் மக்கள் சம்மட்டியால் அடிப்பார்கள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா எச்சரிக்கை

கர்நாடகத்தில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்காவிட்டால் மக்கள் சம்மட்டியால் அடிப்பார்கள் என்று சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்த ராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-02-20 23:15 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 17-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மறுநாள் (அதாவது 18-ந் தேதி) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று முன்தினம் காங்கிரஸ் கொண்டு வந்த மங்களூரு வன்முறை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது தேச துரோக வழக்கு போடுவது குறித்த பிரச்சினையை எழுப்பியது. அதன் மீது நாள் முழுவதும் விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டுத்தொடரின் 4-வது மற்றும் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடர்ந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்று பேசியதாவது:-

நேரில் பார்வையிடவில்லை

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வட கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து, பெருவெள்ளம் உண்டானது. இதனால் சுமார் 100 பேர் மரணம் அடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், கால்நடைகள், உடைமைகளை இழந்தனர். இந்த வெள்ளத்தால் எனது பார்வையில் ரூ.1 லட்சம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. நான் இந்த கருத்தை கூறிய பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா, ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

கர்நாடக அரசு, மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில், வெள்ளத்தால் ரூ.35 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி நேரில் வரவில்லை. மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். ஆனால் அவர்கள் ஒரு ரூபாய் கூட நிதி உதவியை அறிவிக்கவில்லை. இஸ்ரோவில் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண பிரதமர் ேமாடி பெங்களூரு வந்தார். அப்ேபாதும் அவர் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடவில்லை.

உதவி வழங்க முடியாது

வெள்ளத்தால் 2.74 லட்சம் வீடுகள் சேதம் அடைந்ததாக அரசு கூறியது. ஆனால் கவர்னரின் உரையில் 1.24 லட்சம் வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு வழங்காதது ஏன்?. வெள்ளத்தால் 10 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்தன. இவற்றுக்கு அரசு இன்னும் நிவாரணம் கொடுக்கவில்லை. 2009-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் வீடுகளை இழந்த மக்களுக்கு அப்போது மேடான பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் பலர் அங்கு குடியேறவில்லை. தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அதே மக்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஆனால் அவர்களுக்கு உதவி வழங்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.

7,777 அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அவற்றை சரிசெய்ய ரூ.1,500 கோடி வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இதுவரை ரூ.199 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி எப்படி கிடைக்கும்?. வீட்டு உபயோக பொருட்களை இழந்த மக்களுக்கு அவற்றை புதிதாக வாங்கிக்கொள்ள மாநில அரசு தலா ரூ.10 ஆயிரம் வழங்கியது. இந்த உதவி பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை.

மந்திரிகள் குழு

வெள்ளத்தின்போது மீனவர்களின் படகுகள், வலைகள் போன்றவை சேதம் அடைந்தன. அவர்களுக்கு அரசு இதுவரை எந்த உதவியையும் வழங்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் யாரும் சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை. மந்திரிகள் குழு அமைத்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த வேலையை மாநில அரசு செய்யவில்லை. வெள்ளம் ஏற்பட்டு 2 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு முதல் தவணையில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியது. அதன் பிறகு 2-ம் தவணையில் ரூ.669 கோடி ஒதுக்கியது. ஆகமொத்தம் ரூ.1,869 கோடி நிதி ஒதுக்கியது. இதில் இதுவரை ரூ.1,652 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்கு இந்த நிதி போதுமா?. உங்களுக்கு மகிழ்ச்சி தானா?.

கர்நாடகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பா.ஜனதா சார்பில் 25 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரதமரையும், உள்துறை மந்திரியையும் நேரில் சந்தித்து அதிக நிவாரணம் வழங்குமாறு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதை பா.ஜனதா எம்.பி.க்கள் செய்யவில்லை. மத்திய அரசுக்கு செல்லும் வரி வருவாயில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. ஆனால் வெள்ள நிவாரண நிதி குறைவாக ஒதுக்கியிருப்பது அநீதி இல்லையா?. நடப்பு ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வரவேண்டிய வரி வருவாய் பங்கில் ரூ.17 ஆயிரத்து 600 கோடி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.60 ஆயிரம் கோடி குறையும்

15-வது நிதி குழுவின் பரிந்துரையால் கர்நாடகத்தில் 2020-21-ம் ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி கர்நாடகத்திற்கு குறைவாக கிடைக்கும். 5 ஆண்டுகளில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி நிதி கர்நாடகத்துக்கு வருவது குறையும். இந்த சூழ்நிலையில் மாநில அரசு வளர்ச்சி திட்டங்களை எப்படி செயல்படுத்தப்போகிறது?. சரக்கு-சேவை வரி திட்டத்தில் இழப்பீட்டு தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி அதாவது பா.ஜனதா ஆட்சி இருந்தால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அதிக நிதி உதவி கிடைக்கும் என்றும், இதன் மூலம் கர்நாடகத்தில் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்த முடியும் என்றும் எடியூரப்பா கூறினார். இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியே நடக்கிறது. நீங்கள் கூறியபடி கர்நாடகத்தில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்காவிட்டால் மக்கள் உங்களை சம்மட்டியால் அடிப்பார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது நீங்கள் இதே வார்த்தையை எனக்கு கூறினீர்கள். இப்போது நான் அதையே உங்களுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்