கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 9 பேர் கைது கொழுந்தியாளை அடைய தீர்த்து கட்டியது அம்பலம்

பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில் உறவினர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழுந்தியாளை அடைய தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2020-02-20 22:30 GMT
பெங்களூரு, 

பெங்களூரு உரமாவு அருகே வசித்து வந்தவர் லட்சுமண்குமார். இவரது மனைவி ஸ்ரீஜா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான லட்சுமண்குமார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு மகாதேவபுரா ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்த லட்சுமண்குமாரை மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில், லட்சுமண்குமார் கொலை தொடர்பாக, அவரது உறவினரான ஐதராபாத்தை சேர்ந்த சத்தியபிரசாத் (வயது 41), கூலிப்படையை சேர்ந்த பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்த தினேஷ், அவரது மனைவி சாய்தா என்ற சவிதா, தினேசின் கூட்டாளிகள் பிரசாந்த், பிரேம், குசாந்த், சந்தோஷ், ரவி, லோகேஷ் ஆகிய 9 பேரையும் மகாதேவபுரா போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொழுந்தியாளை அடைய...

கொலையான லட்சுமண்குமாரின் மனைவி ஸ்ரீஜாவின் அக்காள் கணவர் தான் சத்திய பிரசாத் ஆவார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் ஆந்திராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். ஸ்ரீஜாவுக்கு திருமணம் முடியும் முன்பாக அவர் தனது அக்காள், பெற்றோருடன் ஆந்திராவில் தான் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு கணவர் லட்சுமண்குமாருடன் அவர் பெங்களூருவுக்கு வந்துவிட்டார். ஸ்ரீஜாவின் அழகில் மயங்கிய சத்திய பிரசாத், அவரை அடைய திட்டமிட்டுள்ளார். இதற்காக லட்சுமண்குமாரை கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அதாவது லட்சுமண்குமாரை கொலை செய்தால், வேறு வழியின்றி பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு வந்துவிடுவார். அதன்பிறகு, ஸ்ரீஜாவுடன் தொடர்பை ஏற்படுத்தி அவரை அடைந்து விடலாம் என்று சத்திய பிரசாத் திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்காக கூலிப்படையை சேர்ந்த தினேசுக்கு ரூ.15 லட்சம் மற்றும் தான் புதிதாக தொடங்கும் நிறுவனத்தில் வேலை தருவதாக சத்திய பிரசாத் கூறியுள்ளார். இதற்கு தினேஷ், அவரது மனைவி சாய்தா சம்மதித்துள்ளனர். முதலில் ரூ.3 லட்சமும், அதன்பிறகு, ரூ.1.50 லட்சத்தையும் சத்திய பிரசாத்திடம் இருந்து தினேஷ் வாங்கியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் ஒரு முறையும், கடந்த ஜனவரி மாதமும் லட்சுமண்குமாரை கொலை செய்ய தினேஷ், அவரது கூட்டாளிகள் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியாமல் போய் உள்ளது.

கார்கள் பறிமுதல்

பின்னர் கடந்த 3-ந் தேதி ரிங் ரோட்டில் வைத்து லட்சுமண்குமாரை, தினேஷ், அவரது கூட்டாளிகள் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை நடந்த பின்பு தன் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாதபடி சத்திய பிரசாத் நடந்து கொண்டுள்ளார். ஐதராபாத்தில் இருந்து தனது மனைவி, அவரது பெற்றோரை பெங்களூருவுக்கு விமானத்தில் அழைத்து வந்ததுடன், மகாதேவபுரா போலீசில் புகார் கொடுக்க தேவையான நடவடிக்கையும் சத்திய பிரசாத் தான் செய்ததும் தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து 3 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், மடிக்கணினி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 9 பேரையும் காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்