சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 6,275 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தகவல்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் உள்பட 4 ஏரிகளில் 6,275 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-02-20 22:30 GMT
செங்குன்றம், 

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. இந்த நான்கு ஏரிகளிலும் 11.05 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிரு‌‌ஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீரை சேமித்து வைக்கப்பட்டு தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி கிரு‌‌ஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி தற்போது கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 3,200 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது. இது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 318 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

கூடுதலாக தண்ணீர் கிடக்கும்

கிரு‌‌ஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின்படி வருடந்தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும். இந்த முறை 6 டி.எம்.சி.தண்ணீர் வழங்க முடிவு செய்திருப்பதாக ஆந்திர அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

தற்போதைய நிலவரப்படி கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1,751மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 318 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் தட்டுப்பாடு வராது

பூண்டி ஏரிக்கு இது வரை 5.750 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து 6,275 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளையும் சேர்த்து வெறும் 972 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது. எனவே இந்த ஆண்டு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்