சின்னசேலம் அருகே, தீயில் கருகி பெண் சாவு - சமையல் செய்தபோது பரிதாபம்
சின்னசேலம் அருகே சமையல் செய்தபோது, ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.(வயது 41), இவருக்கு மணிமேகலை(37) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். ராஜேந்திரன் பாண்டியங்குப்பம் கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மணிமேகலை வீட்டு முன்பு விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பின் அருகே இருந்த மண்எண்ணெய் கேன் திடீரென சரிந்து அடுப்பு மீது விழுந்தது. அப்போது தீ குபீரென பற்றியதில், சமையல் செய்து கொண்டிருந்த மணிமேகலையின் சேலையில் பரவி எரியத் தொடங்கியது.
இதில் தீக்காயமடைந்து வலியால் அலறி துடித்த அவரை ராஜேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிமேகலை நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தம்பி மணிவேல் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.