லாரியை முந்தி செல்ல முயன்ற போது மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

தஞ்சை அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது சாலையோரத்தில் இருந்த மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2020-02-21 00:00 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கீழத்தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மகன் கதிரவன் (வயது 18). இவர் பூண்டி பகுதியில் ஒரு கல்லூரியில் பி.பி.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கதிரவன் மோட்டார் சைக்கிளில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பரான மண்டலக்கோட்டையை சேர்ந்த சுதாகருடன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கதிரவன் ஓட்டினார்.

மண்மேட்டில் மோதியது

தஞ்சை-நாகை சாலையில் புலவர்நத்தம் அருகே அண்ணாநகர் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை கதிரவன் முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு கதிரவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சுதாகர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்