கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் சுகாதார சான்றிதழை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் மாநகராட்சி கமி‌‌ஷனர் அறிவிப்பு

பள்ளி, கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் சுகாதாரச் சான்றிதழை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் என்று மாநகராட்சி கமி‌‌ஷனர் அறிவித்துள்ளார்.

Update: 2020-02-20 22:00 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌‌ஷனர் கோ.பிரகா‌‌ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழை பெறுவதற்காக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்று கொள்ள புதிய ‘சாப்ட்வேர்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த 17-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் சுகாதாரச் சான்றிதழை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக, தங்களுக்கென ஒரு பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கி, அதன் மூலம் சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் மற்றும் மண்டல சுகாதார அலுவலர் ஆகியோர் தங்களது பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பின்னர் விண்ணப்பங்கள் ஆய்வு மேற்கொண்ட பின் சுகாதார அலுவலரின் கையொப்பத்துடன் சுகாதார சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்