சமூக வலைத்தளத்தில் நடிகர் தனுசுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நெல்லை போலீஸ் கமி‌ஷனரிடம் மனு

சமூக வலைத்தளத்தில் நடிகர் தனுஷ், டைரக்டர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு மிரட்டல்.

Update: 2020-02-20 22:30 GMT
நெல்லை, 

சமூக வலைத்தளத்தில் நடிகர் தனுஷ், டைரக்டர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கமி‌ஷனரிடம் மனு 

தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் டாமோர் மற்றும் சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு ஆகியோரை சந்தித்து புகார் மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களில் கூறிஇருப்பதாவது:–

கடும் நடவடிக்கை 

சமூக வலைத்தளமான முகநூலில் சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை பகுதியை சேர்ந்த ஒருவர், குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசி உள்ளார். மேலும் தற்போது கர்ணன் என்ற திரைப்படத்தை உருவாக்கி வரும் டைரக்டர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் ஆகியோரை கொலை செய்து விடுவதாகவும், கர்ணன் திரைப்படம் வெளிவந்தால், டைரக்டரை உயிரோடு விடப்போவதில்லை என்றும் மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பெண்களையும் மிகவும் அவதூறாக பேசி இருக்கிறார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்ணன் படத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்