மனுநீதி நாள் முகாமில் ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்
ஆம்பூர் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.;
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே உள்ள கைலாசகிரி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். ஆம்பூர் தாசில்தார் செண்பகவள்ளி வரவேற்றார். முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது துறைகள் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
முகாமில் 38 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 37 பேருக்கு பசுமை வீடு, 18 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் உள்பட 173 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி 33 லட்சத்து 71 ஆயிரத்து 810 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக 2 அமைச்சர்களும் உள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு 99.8 சதவீத மக்களுக்கு வழங்கி அரசின் பாராட்டுகளை பெற்றுள்ளோம்.
பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பை பின்பற்ற வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக பெண்களுக்காக தாலிக்கு தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது. ஆம்பூர் தாலுகாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், குறைகள் குறித்தும் புகார்கள் வந்து கொண்டு உள்ளது. அவை அணைத்தும் சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் சமூக பாதுகாப்பு தாசில்தார் (பொறுப்பு) மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் பாரதி, வருவாய் ஆய்வாளர்கள் ராமன், சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமரன், கோவிந்தசாமி மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டார்.