சுபநிகழ்ச்சிக்கு மரக்கன்றுகள் விற்பனை கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு மரக்கன்றுகள் விற்பனை.;

Update: 2020-02-20 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

மரக்கன்றுகள் 

மரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்குவதுடன் தூய்மைப்படுத்துகின்றன. மேலும் இவை மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான பழங்கள், எரிபொருட்கள், மருத்துவ மூலப்பொருட்கள் முதலியவற்றை வழங்குகிறது. பறவைகளுக்கு வசிப்பிடமாக திகழ்கிறது.

சமீபகாலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினருக்கு மரக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் விழாக்கள், பண்டிகைகள், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் அதிகளவில் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில் விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்பதிவு 

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு போன்ற மரக்கன்றுகளும், மல்லிகை, அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகிறது.

எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்யலாம். இதுதவிர இ–தோட்டம் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 18004254444 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்