“குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தவறான கருத்தை பரப்புகின்றனர்”: விஷ்வ இந்து பரிஷத் அகில உலக துணை தலைவர் பேட்டி

“குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சிலர் தவறான கருத்துகளை பரப்புகின்றனர்“ என்று, விஷ்வ இந்து பரிஷத் அகில உலக துணை தலைவர் பாலகிருஷ்ண நாயக் தெரிவித்தார்.

Update: 2020-02-20 12:28 GMT
இந்து சமய பக்தி இயக்கங்களின் குழு கூட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அகில உலக துணை தலைவர் பாலகிருஷ்ண நாயக்
ஆலோசனை கூட்டம்
பாளையங்கோட்டை திருமால் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் அனைத்து இந்து சமய பக்தி இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாநில இணை செயலாளர் காளிப்பன் வரவேற்று பேசினார்.

விவேகானந்த ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி அகிலானந்தா, அகில பாரத துறவிகள் சங்க இணைச்செயலாளர் சுவாமி ராகவானந்தா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக துணை தலைவர் பாலகிருஷ்ண நாயக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரும் அச்சுறுத்தலாக...
சர்வதேச அளவில் இந்துக்களை ஒன்று படுத்தி, அவர்களின் நலன்களை பாதுகாக்க விஷ்வ இந்து பரிஷத் பாடுபட்டு வருகிறது. இந்தியாவில் இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து சமயம் ஆகியவை பலமுறை தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. சர்வதேச பயங்கரவாதம் மத மாற்றம், உலக நாடுகளின் பேராசை போன்றவைகள் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இதை எதிர்த்து இந்து இயக்கங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தனித்தனியாக செயல்படும் சமய, ஆன்மிக பக்தி இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டு உள்ளது.

மடங்கள், பக்தி இயக்கங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டையும், நம் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்கள் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. இந்த சட்டங்களை விஷ்வ இந்து பரிஷத் ஆதரிக்கிறது.

தவறான கருத்துகள்
மேற்கண்ட சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானது என தவறான கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள். இதனால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அந்த குழு எத்தனை ஆண்டுக்குள் கோவிலை கட்ட வேண்டும் என முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பல்வேறு இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்