ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு விடும் மையங்கள்-விரைவில் தொடங்க ஆலோசனை

ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு விடும் மையங்களை விரைவில் தொடங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2020-02-20 06:12 GMT
வேளாண் எந்திரங்கள் குறித்து பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரேணுகாதேவி விளக்கியபோது எடுத்தபடம்
ஆலோசனை கூட்டம்
விவசாயம் செய்யும் பெண்களை கண்டறிந்து, அவர்களை விவசாயத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் சத்தான காய்கறிகளை விளைவிக்க தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விதைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் வேளாண் பொறியியல் துறை மற்றும் மகளிர் நல மேம்பாட்டு திட்டம் மூலம் ஊராட்சி அளவிலான மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு சார்பில் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு விடும் மையங்களை விரைவில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மீன்கரை ரோட்டில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார். மகளிர் திட்ட உதவி அலுவலர் குமரவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண் கருவிகள் குறித்தும், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் மானியம் குறித்து மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி நிறுவனங்களின் டிராக்டர், மருந்து தெளிப்பு கருவி உள்ளிட்ட வேளாண் எந்திரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் ராஜீவ்காந்தி, சுரேஷ், பாலகிருஷ்ணகுமார், மகளிர் திட்ட வட்டார மேலாளர்கள் முருகன், பவித்ரா, ஜோஸ்லின் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

95 சதவீதம் மானியம்
நாற்று நடவு செய்தல், களை எடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது எந்திரங்கள் ஆண்களை கொண்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை, மகளிர் நல மேம்பாட்டு திட்டம் இணைந்து வேளாண் எந்திரங்களை மானிய விலையில் வாங்கி வாடகைக்கு விடும் மையம் அமைக்கப்படுகிறது. டிராக்டர், மருந்து தெளிக்கும் கருவி, களை எடுக்கும் கருவி, கலப்பை உள்பட 19 வகையாக எந்திரங்கள் வாங்குவதற்கு வேளாண் பொறியியல் துறை 80 சதவீதமும், மகளிர் திட்டம் 15 சதவீதமும் சேர்த்து 95 சதவீதம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள 5 சதவீதம் மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் பங்கு தொகையில் இருந்து கொடுக்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீடாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் தெற்கு ஒன்றியத்தில் ஊஞ்சவேலாம்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி ஆகிய ஊராட்சிகளும், வடக்கில் திம்மங்குத்து, திப்பம்பட்டி, புரவிபாளையம் ஆகிய ஊராட்சிகளும், கிணத்துக்கடவில் குருநெல்லிபாளையம், சொக்கனூர் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 2-ம் கட்டமாக தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் தொடங்கப்பட உள்ளது.

வாடகை நிர்ணயம்
மேலும் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். வாடகை மையம் மூலம் எந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகை விடலாம். இதற்கான வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்படும். மேலும் எவ்வளவு வாடகை என்பது குறித்த தகவல் பலகையும் அந்த மையத்தில் வைக்கப்படும். இதை தவிர மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பினர் பணியாளர் குழுவை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் எந்திரங்களை பெண்களே ஓட்டி சென்று, களை எடுத்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் வருவாயை கூட்டமைப்பினர் பிரித்து பங்கு போட்டு கொள்ள முடியாது. வருவாயை கொண்டு கூடுதலாக எந்திரங்கள் வாங்கி கொள்ளலாம். மேலும் கூட்டமைப்பில் உள்ள பெண்களுக்கு கடனுதவி கொடுக்கலாம். இதற்கிடையில் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்ட எந்திரங்கள் முறையாக பயன்பாட்டில் உள்ளதா? யாருக்காவது விற்பனை செய்யப்பட்டு உள்ளதா? கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தை தொடர்ந்த மற்ற பிற திட்டங்களையும் செயல் படுத்த நடவடிக்கை எடுக் கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்