குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோவையில் முஸ்லிம்கள் பேரணி- கலெக்டர் அலுவலகம் முற்றுகை - கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் முஸ்லிம்கள் பேரணியாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், இந்த சட்டத்திற்கு எதிரான தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ஜமாத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு உள்பட பல்வேறு இயக்கங்கள் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை 10.30 மணியளவில் ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.
ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் அருகே வந்தபோது தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகேயும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ேபரணியாக வந்தனர். பேரணியில் வந்தவர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தி வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வந்த அவர்கள், அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணி மற்றும் முற்றுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 20 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து டவுன் ஹால் வரை அவர்கள் குவிந்து இருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஆண்கள் சாலையின் ஒரு புறமும், பெண்கள் மற்றொரு புறமும் அணிவகுத்து வந்தனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
முற்றுகை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன், அப்துல் ரகீம் ஆகியோர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல, அனைத்து மக்களையும் பாதிக்கும். இது ஒரு கருப்பு சட்டமாகும். மதத்தின் அடிப்படையில் மக்களை இந்த சட்டம் பிரிக்கப்பார்க்கிறது. இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்போது இருந்து இருந்தால் தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றி இதனை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து இருப்பார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டம் அறவழியில் நடைபெறும், கோவையின் மிகப்பெரிய போராட்டம். இது தொடக்கம்தான். இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேரணி மற்றும் முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலை வழியாகவும், அவினாசி சாலை வழியாகவும் மாற்றி விடப்பட்டது. இதனால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.
போராட்டத்தையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் 1,384 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மத்திய அதிவிரைவு படையினரும்(ஆர்.ஏ.எப்.) துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் இருந்தனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனமும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முஸ்லிம் கூட்டமைப்பினர் போராட்டத்தையொட்டி கோவை ரெயில் நிலையம் சாலையில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் முழு அடைப்பு நடைபெற்றதுபோல் காணப்பட்டது.
கோவையில் சில பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள், குட்ஷெட் ரோடு வழியாக செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டனர். போராட்டம் நடைபெற்ற காலை 10.30 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் வல்ஹதீஸ், மனித நேய ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா, வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.