வண்ணாரப்பேட்டையில் 6-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்

வண்ணாரப்பேட்டையில் நேற்று 6-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-19 22:30 GMT
பெரம்பூர், 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து போலீசாரின் தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் வண்ணாரப்பேட்டை பகுதி முஸ்லிம்கள் 14-ந்தேதி இரவு முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் முஸ்லிம்களின் போராட்டம் நீடித்தது.

ஜி.ராமகிருஷ்ணன்

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “விடா முயற்சியோடு போராடி வரும் முஸ்லிம்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். என்றும் உங்களுக்கு உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருக்கும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பிறகு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் மண்ணை கவ்வ வைத்துள்ளார்கள். வருகிற 26-ந் தேதி இந்த சட்டங்களுக்கு எதிரான மாபெரும் கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொள்கிறார்” என்றார்.

முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் தனது குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.

போராட்டம் நடந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்களுக்கு பிஸ்கட், காபி, சாப்பாடு, தண்ணீர் ஆகியவற்றை போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கியபடி இருந்தனர்.

மேலும் செய்திகள்