கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா? போலீசார் விசாரணை
சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலியானார். இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் கம்பெனியில் திருப்பூரை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பிரபு (வயது 24) பணிபுரிந்து வந்தார்.
என்ஜினீயரான அவர் நேற்று பணியில் இருக்கும்போது, திடீரென்று நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்ததில் கை, உடல் முறிந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் விரைந்து வந்து பலியாகி கிடந்த அவரது உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலையா? போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரபுவின் சக பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த பிரபு, பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.