கொரோனா தடுப்பு முகக்கவசங்கள் தயாரிக்க ஊக்குவிக்க வேண்டும்- மத்திய, மாநில அரசுகளுக்கு மில் உரிமையாளர்கள் கோரிக்கை
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசங்களை தயாரிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மில் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கோவை,
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் ஏராளமான மில்கள் உள்ளன. ஆனால் அவற்றில் 5 மில்களில் தான் தொழில்நுட்ப ஜவுளிகள்(டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்) தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஜவுளிகள் என்றால் விவசாயம், மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளுக்கு தேவையான ஜவுளிகள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மருத்துவத்துறைக்கு தேவையான பேண்டேஜ் துணிகள், பஞ்சு ஆகியவை ராஜபாளையம் உள்பட சில பகுதிகளில் உள்ள மில்களில் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேவை அதிகமாக இருக்கும்போது, அதை தயாரிக்க கோவையில் உள்ள மில்கள் முன்வருவதில்லை.
இதுகுறித்து கோவையை அடுத்த அன்னூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் தயாரிக்கும் மில் உரிமையாளர் சாஸ்தா ராஜா கூறியதாவது:-
தொழில்நுட்ப ஜவுளி, அதிலும் குறிப்பாக மருத்துவ துறைக்கு தேவையான தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு அதிக தேவை இருந்தும் அதை கோவை மில்கள் தயாரிக்க முன்வராதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். தற்போது சீனா மட்டுமல்லாமல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் ‘என் 95’ என்ற முகக்கவசம்(மாஸ்க்) ஒன்றின் விலை ரூ.1,500. உலகில் இத்தகைய முகக்கவசத்தை குறைந்த விலையில் தயாரிக்கும் ஒரே நாடு சீனா தான். இந்தியாவில் மும்பை, புனே ஆகிய இடங்களில் 3 தொழிற்சாலைகளில் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அங்கும் போதுமான அளவு கையிருப்பு இல்லை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது ‘என் 95’ முகக்கவசம் மட்டும் தான். அதை தயாரிக்கும் சீனா தங்கள் நாட்டு மக்களுக்கு தயாரித்து இலவசமாக வழங்கி நோய் பரவுவதை கட்டுப்படுத்துகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவில் இருந்து வந்தவர்கள் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஊள்ளனர். நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு புறம் இருக்க அந்த நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் சீனா தீவிரமாக உள்ளது. அதனால் தான் ‘என் 95’ என்ற முகக்கவசத்தை அந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளது.
அதுபோல பக்கத்து நாடான இந்தியாவும் முகக்கவசங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ‘என் 95’ முகக்கவசத்தை இந்தியாவில், அதுவும் கோவை மாவட்டத்தில் தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். இந்த முகக்கவசத்தை உற்பத்தி செய்யும் எந்திரத்தையும் சீனா தான் தயாரிக்கிறது. ஆனால் இப்போதைக்கு சீனாவில் இருந்து அந்த எந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே ‘என் 95’ முகக்கவசத்தை உற்பத்தி செய்யும் எந்திரங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பெற்று இந்திய உற்பத்தியாளர்களுக்கு அளித்தால் ‘என் 95’ முகக்கவசத்தை தயாரிக்க முடியும். இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கோடை காலம் தொடங்குவதால் கொரோனா வைரஸ் கோவையில் பரவுவது அவ்வளவு சாத்தியம் இல்லை. இருந்தபோதிலும் வெளிநாடுகளிலிருந்து கோவை வருபவர்களை தனிமைப்படுத்தி அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவர்களில் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறி கிடையாது. ஆனாலும் அவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள், உணவு அளிப்பவர்கள் அனைவரும் அதற்கான பிரத்யேக ஆடைகளை (பெர்சனல் புரடக்சன் எக்யூப்மெண்ட்) அணிந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் ‘என் 95’ முகக்கவசங்களையும் அணிந்துள்ளனர். இத்தகைய முகக்கவசங்கள் மற்றும் பிரத்யேக உடைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இது தவிர மூன்று அடுக்கு முகக்கவசம் ஆயிரக்கணக்கில் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.