பாரம்பரிய மிக்க ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டும் அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் பேச்சு

பாரம்பரிய மிக்க ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

Update: 2020-02-19 23:00 GMT
நெல்லை, 

பாரம்பரிய மிக்க ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

கணித்தமிழ் பேரவை திருவிழா 

பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல வளாகத்தில் கணித்தமிழ் பேரவை திருவிழா நேற்று நடந்தது. உதவி பேராசிரியர் சரவணன் வரவேற்று பேசினார். அண்ணாபல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர்.

அப்போது அவர் பேசியதாவது:–

உலகில் தொன்மையான மொழி தமிழ். பல மொழிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் தமிழ் இதுவரை எந்த மாற்றமும் அடையவில்லை. மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளில் பேசும் போது, மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.

தமிழகத்தில் பிறந்த போதிதர்மர் என்ற மகான் சீனாவுக்கு சென்று தமிழ் மொழியை பரப்பியதாக வரலாறு கூறுகிறது. மேலும் அவர், தற்காப்பு கலைகளையும் கற்று கொடுத்துள்ளார். சித்த மருத்துவம் செய்து பல நோயாளிகளை காப்பாற்றியுள்ளார்.

அவர், காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் பிறந்தார். அதனால் தான் சமீபத்தில் பிரதமர் மோடி. சீன பிரதமர் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.

ஓலைச்சுவடிகள் 

நமது முன்னோர்கள் இயற்கை வைத்தியம் முறையில் சிகிச்சை செய்து வந்தனர். அவர்கள், ஓலைச்சுவடிகளில் பல மருத்துவ ரகசியங்களையும், பல வரலாற்று சிறப்புகளையும் குறிப்பிட்டு உள்ளனர். அதன் குறிப்புகளை இதுவரை நாம் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டும். அதை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து டாக்டர் சோமசுந்தரம், தமிழின் பெருமைகளையும், அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமாக பேசினார். உதவி பேராசிரியை பிருந்தா நன்றி கூறினார். விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்