4 வழிச்சாலையில் கூடுதலாக 36 பாலங்கள் கட்டப்படும்; வசந்தகுமார் எம்.பி. தகவல்
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலையில் கூடுதலாக 36 பாலங்கள் கட்டப்பட இருப்பதாக வசந்தகுமார் எம்.பி. கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறைகளை கேட்கும் கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வசந்தகுமார் எம்.பி. தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்கான குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். திருவிதாங்கோடு வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட சேவியர்புரம் என்ற ஊரின் மையப்பகுதியில் 4 வழிச்சாலை வருவதால் அந்த ஊர் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் கேட்டார்கள். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினேன். இதைத் தொடர்ந்து சேவியர்புரத்தில் மேம்பாலம் அமைத்து தர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
புத்தேரியில் ரூ.36 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் குளத்தின் மேல் மட்டும் அமைப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது குளத்தை தாண்டி உள்ள சாலைக்கு மறுபுறம் வரை அதாவது சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலையில் ஏற்கனவே சிறிய மற்றும் பெரிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் முடிவடையும். இந்த நிலையில் கூடுதலாக 36 பாலங்கள் கட்டப்பட உள்ளன. அவற்றின் திட்ட மதிப்பு ரூ.500 கோடி ஆகும். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் 10 இடங்களில் சாலையின் கீழ் பகுதி வழியாக சுரங்க பாதையும், 2 இடங்களில் சிறிய பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் 76 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் 2022–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் பணிகளை அதற்கு முன்பாகவே முடித்து தரும்படி நான் கேட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்னியாகுமரி கோவளம் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தை வசந்தகுமார் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையத்தை சீரமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின் போது காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் சீனிவாசன், கன்னியாகுமரி அரசுபோக்குவரத்து கழக மேலாளர் பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் அனுஷாபிரைட் உள்பட பலர் உடனிருந்தனர்.