ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மனநல விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மனநல விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மனநலத்துறை சார்பில் பொதுமக்களுக்கான மனநல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மனநலத்துறை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்களாலும், சூழலியல் காரணங்களாலும் மனநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனிதன் குறிப்பிட்ட மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் சீக்கிரமாக தூங்க வேண்டும். காலதாமதமாக தூங்கக்கூடாது. பள்ளி மாணவ– மாணவிகளை அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அழுத்தம் கொடுக்கக்கூடாது. இப்படி கட்டாயப்படுத்துவதால் மாணவ–மாணவிகள் மனநலம் பாதிக்க வாய்ப்புள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. மேலும் தமிழக அரசால் நடத்தப்படும் தற்கொலை தடுப்பு ஆலோசனை தொலைபேசி எண் 104 மூலம் 24 மணி நேரமும் அளிக்கப்படுகிறது. கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வில் சிறப்பு சலுகைகள் பெற சான்று வழங்கப்படுகிறது.
முதல்–அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மற்றும் தீவிர மனநோய்களுக்கான மின் அதிர்வு சிகிச்சை போன்ற உயர்தரமான சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இவ்வாறு டீன் சுகந்தி ராஜகுமாரி பேசினார்.
இதில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனநல மருத்துவத்துறை தலைவர் அப்துல் ரகுமான் வரவேற்று பேசினார். மனநல மருத்துவர் அருள்மேரி லுபீத், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலட்சுமி மோகன்தாஸ், ரெனிமோள், நர்சிங் மாணவ–மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டது.