குடிபோதையில் குடிசை வீடுகளுக்கு தீ வைத்த வாலிபர் கைது
பாணாவரம் அருகே குடிபோதையில் குடிசை வீடுகளுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பனப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (25). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த சரவணன், ரமேசுக்கு சொந்த குடிசை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். தீ மள மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அருகில் இருந்த ஆறுமுகம் என்பவரது குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.
இதுபற்றி சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 வீடுகளிலும் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பாணாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் யுவராஜி வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தார்.