முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான போட்டிகள்
2019-20-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த போட்டிகளை நேற்று முன் தினம் கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில் நேற்று முன்தினம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆக்கி, ஜீடோ மற்றும் கூடைப்பந்து போன்ற போட்டிகள், ஆண்களுக்கான கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளும் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டென்னிஸ் போட்டிகள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆபீசர்ஸ் கிளப்பிலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்ட இறகுப்பந்து கழக உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெற்றது.
பெண்களுக்கான கைப்பந்து
தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் பெண்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல், தடகளம் மற்றும் குத்துச்சண்டை போன்ற போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தடகள போட்டிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடையை தாண்டி ஓட்டப்பந்தயம் உள்பட பல பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது.
இதேபோல நீச்சல் போட்டிகளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பல பிரிவுகளில் நடைபெற்றது. இதில் தடகளம் மற்றும் நீச்சல் போட்டியில் முதலிடம் பெறுபவர்கள், குழு விளையாட்டு போட்டியில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.