தென்காசியில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

தென்காசியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-02-19 22:30 GMT
தென்காசி, 

தென்காசியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தென்காசி ஜமாஅத்துல் உலமா சபையினர் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் கோ‌ஷங்கள் போட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு 

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்