குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-19 23:00 GMT
நெல்லை, 

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் சட்டசபை முற்றுகை போராட்டமும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டமும் நடந்தது.

நெல்லை கலெக்டர் அலுவலகம் 

நெல்லையில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில், நெல்லை கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் காலை 8 மணிக்கே அங்கு வந்து குவியத்தொடங்கினார்கள். 10 மணிக்கு முற்றுகை போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டமானது மாவட்ட அறிவியல் மையம் அருகில் தொடங்கியது. தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை நிர்வாகி சலாஹூதீன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஹாமீஸ் அப்துல்காதர், மீராசா, எம்.ஏ.எஸ். அப்துல்காதர், உஸ்மான், சாகுல் உஸ்மானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலமா சபை நிர்வாகிகள் ஹைதர்அலி, முகமது இலியாஸ் உஸ்மானி, ஜலீல் அகமது, உஸ்மானி ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன், தி.மு.க. சார்பில் கவிஞர் மூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமதுஅலி, இளைஞர் அணி செயலாளர் முகமது கடாபி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், மாவட்ட செயலாளர் பிலால், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் கனி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், பேராசிரியர் பொன்ராஜ், மனித நேய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பாளை.ரபீக், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மில்லத் இஸ்மாயில், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

கைக்குழந்தைகளுடன் 

இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், தங்களுடைய கைக்குழந்தைகளுடன் மாவட்ட அறிவியல் மையம் முன்பு உள்ள அண்ணா சாலையில் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து இருந்தனர். சிலர் குடை பிடித்து இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய கொடியை ஏந்தி வந்தனர். இந்த போராட்டத்தையொட்டி மேலப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் நெல்லை கலெக்டர் அலுவலக பகுதிக்குள் யாரும் நுழைந்து விட முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கின்றவர்கள் மட்டுமே சோதனை செய்து அனுப்பப்பட்டனர். இதேபோல் கொக்கிரகுளம் தபால் நிலையம் அருகில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கின்றவர்கள் மட்டுமே சோதனை செய்து அனுப்பப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு 

இந்த போராட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சரவணன், கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரை ஆகியோர் தலைமையில் 600–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக நெல்லைக்கு வருகின்ற அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்