பைரவ மூர்த்தி கோவிலில் கோமாதா பூஜை
பைரவ மூர்த்தி சுவாமி கோவிலில் உலக நன்மை வேண்டி 108 கோமாதா பூஜை நடைபெற்றது.
கோமாதா பூஜை
காரைக்குடி வைரவபுரத்தில் உள்ளது ஸ்ரீபைரவ மூர்த்தி சுவாமி கோவில். இந்த கோவிலில் உலக நன்மை வேண்டியும், அனைத்து பகுதியிலும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் 108 கலச பூஜை, 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கோமாதா பூஜை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பாஸ்கர் தலைமை தாங்கினார். விழா பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் ஏராளமான சிவாச்சாரியார்கள் செய்தனர். இதையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கி, திருவாசக முற்றோதல், 108 கலசங்கள் மற்றும் 108 சங்குகள் வைத்து முதல்கால யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2-ம் கால யாக பூஜை, அஷ்டமி பைரவர் பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
அன்னதானம்
மூலவர் ஸ்ரீ பைரவ மூர்த்தி சுவாமிக்கு 108 கலசங்கள், 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கோமாதா பூஜை வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற் றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., பெரியகருப்பன் எம்.எல்.ஏ., சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன், தொழிலதிபர் படிக்காசு, முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ஆனந்தன், இந்து முன்னணி சிவகங்கை மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.