குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவையில் முஸ்லிம் அமைப்பினர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர்- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி கோவையில் முஸ்லிம் அமைப்பினர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர். மேலும் இன்று (புதன்கிழமை) கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

Update: 2020-02-19 09:21 GMT
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெறக்கோரி கோவை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்த காட்சி.
கோவையில் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடந்த 14-ந்தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.

இதனை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வீடுகளில் தேசியக்கொடி
இந்தநிலையில் கோவை கரும்புக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தேச ஒற்றுமை காக்கும் விதமாகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் நேற்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்றினர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
தேச ஒற்றுமையை வலியுறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகிறோம். முஸ்லிம்களை மட்டுமின்றி அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்று முற்றுகை போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், தமிழக சட்டசபையில் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற கோரியும் ஜமாத்துல் உலமா சபை, அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்