சென்னை, சேலம் உள்பட 5 மண்டலங்களில், டாஸ்மாக் பணியாளர்கள் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்: சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

சென்னை, சேலம் உள்பட 5 மண்டலங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

Update: 2020-02-19 07:32 GMT
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேசிய போது எடுத்த படம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணி நிரந்தரம்
16 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதிய விகிதம் வழங்க வேண்டும். ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டதால் வேலையிழந்த பணியாளர்களை, அரசு துறைகள், நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி அமர்த்த வேண்டும். தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆர்ப்பாட்டம்
சென்னையில் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை அதிகாரிகள் நேரிடையாக சென்று பெற்று செல்வது போல், அனைத்து மாவட்டங்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஆகவே எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

ஆலோசனை
முன்னதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்