கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலையரங்கு கட்டிடத்தை திறந்து வைத்தார்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கு கட்டிடத்தை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.

Update: 2020-02-19 07:19 GMT
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் கலையரங்கு கட்டிடத்தை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்த போது
திறப்பு விழா
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 12 லட்சம் மதிப்பில் புதிதாக திருவள்ளுவர் கலையரங்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி கலையரங்கு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். என்.எல்.சி. மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனர் விக்ரமன், சப்-கலெக்டர் பிரவீன்குமார், பொது மேலாளர் மோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றினார். முன்னதாக கல்லூரி முதல்வர் ராஜவேல் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் அன்புசெல்வன் பேசியதாவது, என்.எல்.சி. நிறுவனம் தனது கடமையை உணர்ந்து, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு என பல்வேறு துறைகளிலும் மாவட்ட நிர்வாகத்துக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறது.

முன்னேற்றம்
மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். உழைக்க வேண்டும். அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்தவர்களே அதிக முன்னேற்றம் அடைந்துள்ளனர். நான் 3 கி.மீ. தொலைவிற்கு நடந்து அருகில் உள்ள ஊருக்கு சென்று படித்தேன். ஆனால் தற்போது அந்தந்த ஊரிலேயே பள்ளிகள் செயல்படுகின்றன. அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் பேசினார். விழாவில் தாசில்தார் கவியரசு, ஒன்றியக்குழு தலைவர் செல்லதுரை, கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், அ.தி.மு.க.நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்