அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: சேலத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என சேலத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மத்திய, கிழக்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாநகர், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும், நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் தலைவாசலில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி இருப்பதை வரவேற்கிறேன்.
குடியுரிமை திருத்த சட்டம்
இதேபோல் காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்து இருப்பதையும் வரவேற்கிறேன். இதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மத்திய அரசு ஏற்று அமல்படுத்த வேண்டும். கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
காலநிைல மாற்றங்களை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. நடத்தும் போராட்டம் அரசியல் ஆதாயத்திற்கானது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. உடனான எங்கள் கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.