உசிலம்பட்டி அருகே, சாமி பெயர் வைப்பதில் பிரச்சினை; கோவிலில் முற்றுகை போராட்டம் - போலீஸ் குவிப்பு- பதற்றம்
உசிலம்பட்டி அருகே பூட்டப்பட்ட கோவிலை திறக்கக் கோரி 2 கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே ஆச்சி கிழவி ஒச்சாண்டம்மன் என்று பெயர் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த கோவிலில் சாமி கும்பிடும் மற்றொரு பிரிவினர் இந்த பெயருடன் ஆண்டாயி என்ற பெயரைச் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை காரணமாக கோவில் சமீபத்தில் பூட்டி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆச்சி கிழவி ஒச்சாண்டம்மன் என்ற பெயருடன் காத்தம்மாள் என்ற பெயரைச் சேர்க்க வேண்டும்அல்லது ஆண்டாயி என்ற பெயரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கோவிலை திறக்கக் கோரியும் நேற்று கீரிப்பட்டி, மேய்க்கிழார்பட்டி ஆகிய 2 கிராம மக்கள் கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவிலின் பழமை மாறாமல் ஏற்கனவே என்ன பெயரில் சாமியின் பெயர் வைக்கப்பட்டிருந்ததோ அதே பெயரில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோதினி, இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், மலர்விழி ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சவுந்தர்யா, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது இந்த போராட்டத்தை கைவிடுமாறும், இது சம்பந்தமாக உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் கோட்டாட்சியர் சவுந்தர்யா கிராம மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினை காரணமாக கோவிலின் மாசி திருவிழா நடைபெறுமா, நடைபெறாதா என்று கிராம மக்கள் வேதனையுடன் உள்ளனர்.