காங்கிரஸ் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து சட்டசபையில் எடியூரப்பா-சித்தராமையா வாக்குவாதம்

காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து சட்டசபையில் எடியூரப்பா-சித்தராமையா இடையே வாக்குவாதம் உண்டானது.

Update: 2020-02-18 23:21 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில், காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். ஆனால் சித்தராமையா அதற்கு அனுமதி கேட்டு பிடிவாதமாக பேசினார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா குறுக்கிட்டு பேசும்போது, ‘‘சபாநாயகர் உத்தரவிட்ட பிறகும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு காங்கிரஸ் அனுமதி கேட்டு பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. உள்நோக்கத்துடன் காங்கிரசார் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு காங்கிரஸ் இடையூறு ஏற்படுத்தக்கூடாது’’ என்றார்.

அப்போது சித்தராமையா, ‘‘நாங்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. மங்களூரு வன்முறை குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு தான் கேட்கிறோம். இது முக்கியமான பிரச்சினை. இதற்கு அனுமதி கொடுக்க மறுக்கும் உங்களின் நோக்கம் என்ன?’’ என்றார்.

நான் உத்தரவிடவில்லை

அப்போது எடியூரப்பா மற்றும் சித்தராமையா இடையே சிறிது நேரம் வாக்குவாதம் உண்டானது. ஒரு கட்டத்தில் எடியூரப்பா, சித்தராமையாவை பார்த்து, “சபாநாயகருக்கு நீங்கள் உத்தரவிடுகிறீர்களா?” என்று கேள்வி கேட்டார். அதற்கு சித்தராமையா, “நான் உத்தரவிடவில்லை. விவாதத்திற்கு அனுமதி கேட்கிறேன்” என்று பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, “இந்த விஷயத்தில் சபாநாயகர் உத்தரவிட்ட பிறகு அதுகுறித்து பேசுவது சரியல்ல” என்று கூறினார். அத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்