சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண்ணிடம் உல்லாசம்: வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலன் கைது
சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவை,
கோவை நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜிஷ்ணு (வயது 23). இவர் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு போட்டோ எடுக்க வந்த கோவையை சேர்ந்த திருமணமான 38 வயது பெண்ணுக்கும், ஜிஷ்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது தனக்கு பல சினிமா டைரக்டர்களை தெரியும் என்றும், பல இளம் பெண்களை சினிமாவில் நடிக்க சேர்த்துள்ளதாகவும் அந்த பெண்ணிடம் ஜிஷ்ணு கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், எனவே உன்னையும் சினிமாவில் நடிக்க சேர்த்து விடுவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை உண்மை என நம்பிய அந்த பெண் அவரிடம் நட்பாக பழகியுள்ளார்.
அத்துடன் அந்த பெண்ணை, ஜிஷ்ணு பலவிதமான போஸ் கொடுக்க சொல்லி, அதை போட்டோ எடுத்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவா்கள் இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து உள்ளனர்.
இதற்கிடையில், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை, அவருக்கு தெரியாமல் ஜிஷ்ணு தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜிஷ்ணு அந்த பெண்ணிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோக்களை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும், உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறியதாக தெரிகிறது.
இந்த மிரட்டலுக்கு பயந்துபோன அந்த பெண்ணும் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை சந்தித்த ஜிஷ்ணு தனக்கு உடனே ரூ.1½ லட்சம் பணம் தரவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு அந்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போட்டோகிராபர் ஜிஷ்ணுவை கைது செய்தனர்.
அத்துடன் அவரிடம் இருந்து ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்கள் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோன்று எத்தனை பெண்களை போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்து உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.