தடுப்பு கம்பியில் கார் மோதி கவிழ்ந்தது தே.மு.தி.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி - மேலும் ஒருவர் படுகாயம்

பொள்ளாச்சி அருகே தடுப்பு கம்பியில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில், தே.மு.தி.க. பிரமுகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update: 2020-02-18 23:30 GMT
கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் குளத்தூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 36). இவர் பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக இருந்தார். பொள்ளாச்சி பகுதி தனியார் தொலைக்காட்சி நிருபராகவும் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, இவர் தனது சொகுசு காரில் நண்பர்களான பொள்ளாச்சி சக்திநகரை சேர்ந்த செந்தில்குமார் (36), கட்டபொம்மன் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் கிஷோர் (19), கல்லூரி மாணவர். டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த அருண், மணிகண்டன் ஆகியோருடன் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நண்பர்களுக்கு காலண்டர், டைரி கொடுப்பதற்காக சென்றார். பின்னர் தனது நண்பர்களுக்கு டைரி, காலண்டர்கள் கொடுத்து விட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர்.

மேலும் வருகிற வழியில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனது நண்பர்களுக்கும் டைரி கொடுக்க நினைத்தனர். இதற்கிடையில் கார் தாமரைக்குளம் பகுதியில் வந்தபோது, காரில் இருந்த மணிகண்டன், அருண் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாக கூறினர். இதனால் காரை நிறுத்தி அவர்களை அங்கே இறக்கி விட்டனர்.

இதனை தொடர்ந்து சந்திரசேகர், செந்தில்குமார், கிஷோர் ஆகிய 3 பேரும் கிணத்துக்கடவுக்கு சென்று அங்குள்ள நண்பர்கள் சிலரை சந்தித்து காலண்டர் கொடுத்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு செல்ல காரில் புறப்பட்டனர். நள்ளிரவில் கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்றபோது, ரோட்டில் ஜல்லிகற்கள் சிதறி கிடந்ததால், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவர் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த தே.மு.தி.க. பிரமுகர் சந்திரசேகர், செந்தில்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் குமார், சேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திரசேகரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செந்தில்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கிஷோரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று கிஷோர், சந்திரசேகர் ஆகியோரின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக காரில் வந்த மணிகண்டன், அருண் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாக கூறி இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன சந்திரசேகருக்கு செல்வி என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த விபத்து பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை உள்ளது. அதில் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் சிதறி ரோட்டில் விழுந்துள்ளது.

வேகமாக வந்த கார் அதில் பட்டு வழுக்கி நிலைதடுமாறி இருக்கலாம். இதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புசுவரில் கார் மோதி விபத்து நடந்து உள்ளது. சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு மற்ற வாகனங்களுக்கு விபத்து இல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்