நகர்ப்புற, ஊரகப்பகுதிகளுக்கான வார்டு மறுவரையறை பட்டியல்; கலெக்டர் வெளியிட்டார்
வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளுக்கான வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வார்டு மறுவரையறைசெய்யும் பணி நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார்.
இதன்படி மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி வார்டுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது 40 ஊராட்சி வார்டுகள் இருந்தது. தற்போது 14 வார்டுகளாக குறைந்துள்ளது.
அதேபோன்று 20 ஊராட்சி ஒன்றியங்கள் 7 ஒன்றியங்களாகவும், 16 பேரூராட்சிகள் 4-ஆகவும் குறைந்துவிட்டது. 6 ஆயிரத்து 78 கிராம பஞ்சாயத்து வார்டுகள் தற்போதைய மறுவரையறை மூலம் 2 ஆயிரத்து 79-ஆக குறைந்துவிட்டது.
நகர்ப்புறங்களை பொறுத்தவரையில் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளும், நகராட்சியை பொறுத்தவரை குடியாத்தத்தில் 36 வார்டுகள், பேரணாம்பட்டில் 21 வார்டுகள் இருந்தன. இதில் எந்த மாற்றமும் இல்லை. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் பள்ளிகொண்டாவில் 18 வார்டுகளும், திருவலம், ஒடுகத்தூர், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும் இருந்தன. இதிலும் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை.
ஊராட்சி ஒன்றியங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டு ஒன்றியத்தில் 21 வார்டுகள் இருந்தன. அவை தற்போது 26 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ஒன்றியத்தில் இருந்த 28 வார்டுகள் 30 வார்டுகளாகவும், காட்பாடி ஒன்றியத்தில் இருந்த 12 வார்டுகள் 20 வார்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 29 வார்டுகள் இருந்தன. அவை தற்போது 15 வார்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கே.வி.குப்பத்தில் 21, கணியம்பாடியில் 13, வேலூரில் 11 ஆகிய வார்டுகள் இருந்தன. இதில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. மொத்தம் இருந்த 390 வார்டுகள் தற்போது 136 வார்டுகளாக குறைந்துள்ளது.
அணைக்கட்டு ஒன்றியத்தில் இருந்த 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் 3 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் இருந்த 3 வார்டுகள் 2 வார்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டு மறுவரையறை குறித்து வருகிற 22-ந் தேதிவரை பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். அதைத்தொடர்ந்து 25-ந் தேதி அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் வரையறை செய்யப்பட்ட பட்டியல் 27-ந் தேதி சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மார்ச் மாதம் 2-வது வாரம் இறுதி வரையறை பட்டியல் வெளியிடப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புருஷோத்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சக்திவேல், மாநகராட்சி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.