தட்டார்மடம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் தொழிலாளி கைது பரபரப்பு வாக்குமூலம்

தட்டார்மடம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-18 23:00 GMT
தட்டார்மடம், 

தட்டார்மடம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அடித்துக்கொலை 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மகாராஜன் (வயது 38). பால் வியாபாரியான இவர் அ.தி.மு.க. ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் பக்கத்து ஊரான மேட்டுவிளையில் பால் சேகரிப்பதற்காக, மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

அப்போது காட்டுப்பகுதியில் மகாராஜனை மர்மநபர் வழிமறித்து உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கைது 

விசாரணையில், மகாராஜனின் எதிர் வீட்டில் வசிக்கும் கசங்காத்தான் மகன் கந்தசாமி (38) என்பவர் மகாராஜனை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பூலுடையார்புரம் தேரிப்பகுதியில் பதுங்கி இருந்த கந்தசாமியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் போலீசாரிடம் கந்தசாமி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

கோவில் வரி வாங்க மறுத்ததால்... 

நான் காஞ்சீபுரத்தில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். விடுமுறை நாட்களில் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் எனக்கும், மகாராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதற்கிடையே, மகாராஜன் எங்களது கிராமத்தில் உள்ள கோவிலில் நிர்வாகியாக இருந்தார். இதனால் அவர் எனது வீட்டில் மட்டும் வரி வாங்காமல் தவிர்த்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த நான், இதுதொடர்பாக மகாராஜனிடம் பேசினேன். ஆனாலும் அவர் என்னிடம் வரி வாங்க மறுத்து விட்டார். இதையடுத்து ஊர் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் மகாராஜனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி பக்கத்து ஊரான மேட்டுவிளைக்கு பால் சேகரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற மகாராஜனை வழிமறித்து, உருட்டுக்கட்டையால் அவரது தலையில் சரமாரியாக அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கந்தசாமியை போலீசார் நேற்று சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்