பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

Update: 2020-02-17 22:15 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம்-நாகை மண்டல ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் தியாகராஜன், தொழிலாளர் சங்க தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க கவுரவ தலைவர் சந்திரமோகன், பொதுச் செயலாளர் அப்பாத்துரை, தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுந்தரபாண்டியன், இணை பொதுச் செயலாளர்கள் தாமரைச்செல்வன், அன்பரசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், நடைபெறும் சட்டசபை கூட்ட தொடரில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

பின்னர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்தின் பயன்பாட்டிற்கு 11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலம் மாநகராட்சியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 11 ஏக்கர் நிலத்தை மீட்டு அரசு போக்குவரத்து கழகத்திற்கு வழங்க வேண்டும். தஞ்சை பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் மினிபஸ்கள், தனியார் பஸ்களை அந்தந்த வழிதடத்தில் இயக்க வேண்டும். நேரம் மற்றும் தடமாறி இயக்கப்படுகின்ற பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் புறநகர் பஸ்கள் அனைத்தையும் பைபாஸ் சாலை வழியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரிக்கு வந்து செல்ல வசதியாக புதிய பஸ் நிலையத்தின் பின்புறமும் உள்ள சுற்றுச்சுவரை இடித்து வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

தஞ்சை காந்திசாலை, தெற்குவீதி, தெற்குஅலங்கம், கீழவீதி ஆகியவற்றை ஒருவழி பாதையாக அறிவிக்க வேண்டும். மேரீஸ்கார்னர் முதல் ராமநாதன் ரவுண்டானா வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

மேலும் செய்திகள்