மும்பையில் 10 மாடிகளை கொண்ட ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பயங்கர தீ 3,500 ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றம்

மும்பையில் 10 மாடிகளை கொண்ட ஜி.எஸ்.டி. அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 ஆயிரத்து 500 ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

Update: 2020-02-18 00:09 GMT
மும்பை, 

மும்பை பைகுல்லா, மஜ்காவ் பகுதியில் உள்ள மகாரானா பிரதாப் சவுக்கில் 10 மாடிகளை கொண்ட ஜி.எஸ்.டி. அலுவலகம் உள்ளது. ‘ஜி.எஸ்.டி. பவன்’ என அழைக்கப்படும் இந்த கட்டிடத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று மதியம் 12.30 மணியளவில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது 9-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது.

இதை அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்தவர்கள் கவனித்து உள்ளனர். அவர்கள் உடனடியாக ஜி.எஸ்.டி. பவனில் இருந்த ஊழியர்களை உஷார்படுத்தினர்.

இதையடுத்து ஊழியர்களுக்கு அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

20 தீயணைப்பு வாகனங்கள்

இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 20 வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளே சிக்கி இருந்தவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 9-வது மாடியில் முழுவதுமாக பற்றி எரிந்த தீ, 10-வது மாடிக்கும் பரவி கரும்புகை வெளியேறியது.

பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புபடையினரும் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சுகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. பின்னர் கட்டிடத்தை குளிர்விக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

மூச்சுத்திணறல்

முன்னதாக தீ விபத்து காரணமாக ஜி.எஸ்.டி. பவனில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது. மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் வசித்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே அருகே உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் விசாரணைக்கு பிறகே முழுமையான காரணம் தெரியவரும் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

ஆவணங்கள் நாசம்?

தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருப்பதால் ஆவணங்களுக்கு பாதிப்பு இல்லை என்று தீ விபத்து சம்பவத்தை நேரில் பார்வையிட்ட துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

தீ விபத்தை நேரில் பார்த்த ராகுல் சர்மா என்பவர் கூறுகையில், ‘‘முதலில் சிறிய ரக தீயணைப்பு வாகனங்கள் தான் சம்பவ இடத்துக்கு வந்தன. இதனால் வீரர்களால் 9-வது மாடியில் எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. 54 மீட்டா் உயர ராட்சத ஏணியுடன் கூடிய வாகனம் வந்த பிறகு தான் தீயணைப்பு வீரர்களால் தீயை திறம்பட அணைக்கும் பணியில் ஈடுபட முடிந்தது’’ என்றார்.

தீ விபத்து குறித்து ஜி.எஸ்.டி. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லோரும் பத்திரமாக கட்டிடத்தில் இருந்து வெளியே வந்துவிட்டோம். இதுவரை யாரும் மாயமானதாக தெரியவில்லை” என்றார்.

மும்பையில் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்